சென்னிமலை அருகே பயங்கரம் விவசாயி வெட்டி படுகொலை; 25 பவுன் நகையை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்


சென்னிமலை அருகே பயங்கரம் விவசாயி வெட்டி படுகொலை; 25 பவுன் நகையை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 2 May 2022 3:49 AM IST (Updated: 2 May 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே விவசாயியை வெட்டி படுகொலை செய்த கொள்ளையர்கள் 25 பவுன் நகையை அள்ளிச்சென்றார்கள்.

சென்னிமலை
சென்னிமலை அருகே விவசாயியை வெட்டி படுகொலை செய்த கொள்ளையர்கள் 25 பவுன் நகையை அள்ளிச்சென்றார்கள். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது உப்பிலிபாளையம் கிராமம். இங்குள்ள குட்டக்காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 68) விவசாயி. இவருடைய மனைவி ஜெயமணி (65). இவர்களுக்கு கீதா, சுமதி என்ற 2 மகள்களும், நாகராஜ் வயது (40) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகள்கள் இருவரும் சென்னிமலையிலும், மகன் கோவையிலும் வசித்து வருகின்றனர்.
வீடு அருகில் உள்ள சுமார் 10 ஏக்கர் சொந்தமான நிலத்தை விவசாயி துரைசாமியும், அவரது மனைவி ஜெயமணியும் கவனித்து வந்தனர். 
வீட்டு வாசலில்...
கணவன், மனைவி 2 பேரும் தினமும் இரவு வீட்டுக்கு வெளியே உள்ள வாசலில் கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு துரைசாமியும், ஜெயமணியும் வீட்டு வாசலில் ஆளுக்கு ஒரு கட்டிலில் படுத்து தூங்கி உள்ளனர். 
இதேபோல் தினமும் காலை 5.45 மணிக்கு பால்காரர் சரவணன் என்பவர் துரைசாமியின் வீட்டுக்கு சென்று பால் வாங்குவது வழக்கம். வழக்கம்போல் நேற்று காலை பால் வாங்குவதற்காக துரைசாமி வீட்டுக்கு சரவணன் சென்று உள்ளார். அப்போது வெளிப்புற சுற்றுச்சுவர் மீது பால் கேன் இல்லாததை சரவணன் கண்டார்
கொலை
இதனால் அவர் வெளி கேட்டை திறந்து உள்ளே சென்று உள்ளார். அப்போது  துரைசாமியின் முகம் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு தலையணையால் முகத்தை மூடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் துரைசாமியின் மனைவி ஜெயமணி கழுத்தில் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்து உள்ளார். 
இந்த கொடூர காட்சியை கண்டதும் சரவணன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த துரைசாமியை பார்த்தனர். 
போலீஸ் சூப்பிரண்டு                விசாரணை
இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல்  அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜெயமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோரும் விரைந்து வந்து துரைசாமியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான துரைசாமி வீட்டை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
மோப்ப நாய் 
விசாரணையில், ‘வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் துரைசாமி மற்றும் ஜெயமணியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துரைசாமி இறந்தார். ஜெயமணி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் கொள்ளையர்கள் வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த 2 பீரோக்கள், சூட்கேஸ் ஆகியவற்றை உடைத்து அதில் இருந்த துணிமணிகளை கலைத்து நகை, பணத்தை தேடி உள்ளனர். இதில் துரைசாமி அணிந்திருந்த மோதிரம், அவருடைய மனைவி அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் உள்பட மொத்தம் 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது,’ தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. இந்த மோப்ப நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சுமார் ½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்யல் ஆற்றங்கரை பகுதி வரை சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். 
பரபரப்பு
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (சென்னிமலை), சண்முகசுந்தரம் (அறச்சலூர்), ஜீவானந்தம் (மலையம்பாளையம்) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த விவசாயியை வெட்டி கொலை செய்ததுடன், அவருடைய மனைவியையும் வெட்டி மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடித்து  சென்ற சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story