நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: கிராம சபை கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்-மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் பரபரப்பு


நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: கிராம சபை கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்-மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2022 4:06 AM IST (Updated: 2 May 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம்:
சேலம் அருகே மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கிராம சபை கூட்டம்
சேலம் ஊராட்சி ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நேற்று மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஊராட்சியின் வரவு-செலவு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும், கிராம சபையில் கொண்டுவர உள்ள தீர்மானங்கள் குறித்தும் ஊராட்சி செயலாளர் ரவி விளக்கி பேசினார்.
வாக்குவாதம்
அப்போது, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்காதது, குடிநீர் தட்டுப்பாடு, குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆறுமுகம் பதில் கூறினார்.
இதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலின்போது நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவிட்டதாக அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் பேசினர். அதற்கு தி.மு.க.வை சேர்ந்த துணை தலைவர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தி சங்கரன், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த எம்.எல்.பி.முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கிராம சபை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.
போலீசார் சமாதானம்
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மேலும், ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும், இந்த கிராம சபை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாதது ஏன்? என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அதற்கு அனைத்து கோரிக்கைகளையும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம் உறுதியளித்தார்.
சேலம் அருகே நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க.வினரின் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story