பள்ளிக்கூடங்களில் உள்ள பாதுகாப்பு குழு மூலம் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


பள்ளிக்கூடங்களில் உள்ள பாதுகாப்பு குழு மூலம் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 2 May 2022 4:15 AM IST (Updated: 2 May 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மொடக்குறிச்சி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசினார்.

மொடக்குறிச்சி
பள்ளிக்கூடங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மொடக்குறிச்சி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசினார். 
கலெக்டர் 
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட துய்யம்பூந்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் பேபி பாலசுப்ரமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் என்கிற சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசி
கிராம சபை கூட்டம் என்பது பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை எடுத்துரைத்து தீர்த்து கொள்வது ஆகும். அனைத்துத்துறை அதிகாரிகள் அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் தெரிவித்து உள்ளனர். எனவே அரசின்  திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாம்களில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த குழு மூலம் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாதவாறு அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
இதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் தாட்கோ திட்டத்தின் மூலம் 15 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டையையும் வழங்கினார்.
இதில் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், உமா, துய்யம்பூந்துறை ஊராட்சி துணைத்தலைவர் தினகரன் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வார்டு உறுப்பினர்கள் புகார்
இதேபோல் பூந்துறை சேமூர் ஊராட்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி.காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என ஊராட்சி தலைவர் தமிழ் செல்வனிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
இதேபோல் 2-வது வார்டு தாமரைப்புதூரில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி அவதிப்படுவதாகவும் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இல்லையென்றால் சாலை நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் 5-க்கும் மேற்பட்ட வார்டுகளில் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை என வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
அனுமதி இன்றி...
விளக்கேத்தி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ‘விளக்கேத்தி ஊராட்சிக்கு உள்பட்ட 4 இடங்களில் தென்னை நார் கழிவு தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுவதாகவும், அவைகளை தடை செய்ய வேண்டும்,’ எனவும் பொதுமக்கள் கோரிக்கை மனுவை ஊராட்சி தலைவர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகளிடம் அளித்தனர். 
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கப்படும் என ஊராட்சி தலைவர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இதேபோல் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

Next Story