ஈரோட்டில் மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொலை செய்த கணவர் கைது; போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


ஈரோட்டில் மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொலை செய்த கணவர் கைது; போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 May 2022 4:28 AM IST (Updated: 2 May 2022 4:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு
ஈரோட்டில், மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதல்
ஈரோடு சூளை ஈ.பி.பி. நகர் பி.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). தனியார் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி என்கிற புவனேஸ்வரி (38). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். புவனேஸ்வரிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சுரேஷ் புவனேஸ்வரியை கண்டித்துள்ளார்.
இருப்பினும், புவனேஸ்வரி கள்ளக்காதலை கைவிடாததால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ், மனைவி புவனேஸ்வரியை விட்டு பிரிந்து தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், புவனேஸ்வரியின் குழந்தைகள் நேற்று முன்தினம் அதேபகுதியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றனர்.
கழுத்தை நெரித்து கொலை
இதைத்தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி, கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், புவனேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புவனேஸ்வரியின் கணவர் சுரேஷ், கள்ளக்காதலனான பெயிண்டர் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், புவனேஸ்வரியின் கழுத்தை ஓயரால் இறுக்கி கொலை செய்ததை அவருடைய கணவர் சுரேஷ் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் சுரேசை கைது செய்தனர்.
கடன் பிரச்சினை
கைது செய்யப்பட்ட சுரேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
புவனேஸ்வரியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் சுரேஷிற்கும், புவனேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி சுரேஷ் எச்சரித்தும் புவனேஸ்வரி கேட்காததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரியை விட்டு சுரேஷ் பிரிந்து அவரது அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
புவனேஸ்வரி வசிக்கும் வீட்டினை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வாங்கி, புவனேஸ்வரி பெயரில் கிரையம் செய்துள்ளார். தற்போது சுரேசுக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக, புவனேஸ்வரியின் பெயரில் உள்ள வீட்டை விற்க முடிவு செய்திருப்பதாக சுரேஷ் அவரிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு புவனேஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை.
ஆத்திரம்
இதற்காக நேற்று முன்தினம் புவனேஸ்வரியின் வீட்டிற்கு வந்த சுரேஷ், அவரை சமாதானம் செய்து வீட்டினை விற்க அனுமதி கேட்டுள்ளார். முதலில் முரண்டு பிடித்த புவனேஸ்வரி பின்னர், வீட்டினை விற்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், வீடு விற்கும் பணத்தில் அதிக பங்கு தனக்கு தர வேண்டும், இல்லை என்றால் வீட்டினை விற்க முன்வர மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், சுரேஷ், புவனேஸ்வரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், புவனேஸ்வரியின் கழுத்தை அருகில் இருந்த அயர்ன் பாக்ஸ் ஓயரால் இறுக்கி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story