சாலையில் கொட்டிய ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து போலீஸ்காரர்


சாலையில் கொட்டிய ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து போலீஸ்காரர்
x
தினத்தந்தி 2 May 2022 4:56 PM IST (Updated: 2 May 2022 4:56 PM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல் போக்குவரத்து போலீஸ்காரர் சாலையின் நடுவில் கொட்டி கிடந்த ஜல்லி கற்களை வாரி சாலையோரம் கொட்டி சரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சென்னை மதுரவாயல் சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஜல்லி கலவை ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து சிறிது ஜல்லி கற்கள் சாலையின் நடுவில் கொட்டியது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஜல்லிகள் சிதறி கிடந்தது. இதனை கண்டும் காணாததுபோல் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், ஜல்லி கற்களின் மீது வாகனங்களை ஏற்றி இறக்கி சென்றனர்.

அப்போது அந்த சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்திகேயன், விபத்து ஏற்படாமல் தடுக்க அருகில் உள்ளவர்களிடம் இருந்து மண்வெட்டியை வாங்கி சாலையின் நடுவில் கொட்டி கிடந்த ஜல்லி கற்களை வாரி சாலையோரம் கொட்டி சரி செய்தார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. போக்குவரத்து போலீஸ்காரரின் இந்த செயலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.


Next Story