கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக 22 பட்டியல் எழுத்தர்கள் பணி நீக்கம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக மாவட்டத்தில் மொத்தம் 22 பட்டியல் எழுத்தர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக மாவட்டத்தில் மொத்தம் 22 பட்டியல் எழுத்தர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் 63 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் tncse-edpc.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் ஒளிவுமறைவற்ற முறையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் ஒரு சில மையங்களில் விவசாயிகள் அல்லாதோரிடம் நெல் கொள்முதல் செய்தல், அனுமதி ஆணையின்றி நெல் கொள்முதல் செய்தல், இணையதளம் மூலமாக அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிக அளவில் கொள்முதல் செய்தல், நெல் கொள்முதல் செய்யும் போது அரசால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறுதல் உள்ளிட்ட குறைபாடுகள் காணப்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்காக கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் இதர பணியாளர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து திடீர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
22 பட்டியல் எழுத்தர்கள்
இந்த ஆய்வுகளின் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக 12 பட்டியல் எழுத்தர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது இதேபோன்று குற்றச்சாட்டுகளுக்காக மேலும் 10 பட்டியல் எழுத்தர்கள் இன்று நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக மாவட்டத்தில் மொத்தம் 22 பட்டியல் எழுத்தர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தவறான முறையில் பயன்பெற முயற்சிக்கும் நபர்கள், விவசாயிகள் அல்லாதோர் மீது போலீசார் மூலமாக வழக்குப்பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் இவ்வாறான தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்வதுடன் போலீசார் மூலமாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story