பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அங்குதான் இருந்தேன்- உத்தவ் தாக்கரேக்கு, பட்னாவிஸ் பதிலடி


தேவேந்திர பட்னாவிஸ்
x
தேவேந்திர பட்னாவிஸ்
தினத்தந்தி 2 May 2022 7:18 PM IST (Updated: 2 May 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அங்கு தான் இருந்தேன் என கூறி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை, 
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அங்கு தான் இருந்தேன் என கூறி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். 
 சிவசேனா கேள்வி
மராட்டியத்தில் ஆளும் சிவசேனா, பா.ஜனதா இடையே இந்துத்வா யாருக்கு சொந்தம் என்பதில் வார்த்தை போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பா.ஜனதா தலைவர்கள் எங்கே ஓடி ஒளிந்துகொண்டார்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார். 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
 18 நாள் சிறை
மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிளை அகற்றுவது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பியபோது அவர்கள் பயந்துபோய் பாபர் மசூதியை அவர்கள் வீழ்த்தியதாக கூறுகிறார். 
நான் அதை பாபர் மசூதியாக கருதவில்லை. அது ஒரு கட்டிடம். அவ்வளவு தான். எந்த ஒரு இந்துவும் ஒரு மசூதியை இடிக்க முடியாது. அந்த கட்டிடத்தை இடித்தபோது நீங்கள் எங்கிருந்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நான் பெருமையுடன் சொல்கிறேன். ஆம் நான் அந்த கட்டிடத்தை இடித்தபோது அங்கு இருந்தேன். கரசேவையில் ஈடுபட்டதற்காக 18 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். அந்த நேரத்தில் சிவசேனா தலைவர்கள் யாரும் அங்கு இல்லை. 
தேச துரோகம்
மாறாக ராமரை எதிர்த்தவர்களுடன் கைகோர்த்து நீங்கள் (சிவசேனா) ஆட்சி அமைத்தீர்கள். மேலும் ராமர் உண்மையில் பிறந்தாரா என்று கேள்வி எழுப்பியர்களுடன் சேர்ந்து ஆட்சிக்கு வந்தீர்கள். மராட்டியத்தில் அனுமன் பஜனை பாடுவது, மகா விகாஸ் அகாடி அரசுக்கு தேசத்துரோகத்திற்கு சமமாக தெரிகிறது. 
நவநீத் ரானா, ரவி ரானா குற்றப்பத்திரிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது? முதல்-மந்திரி இல்லத்திற்கு வெளியே அனுமன் பஜனை பாடுவதாக அறிவித்ததால், அவர்கள் அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டனர். சிவசேனாவை பார்த்து கேட்கிறேன். நீங்கள் ராமன் பக்கமா அல்லது ராவணனின் பக்கமா? என்பதை கூற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
--------------


Next Story