தேனியில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


தேனியில்  நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 7:55 PM IST (Updated: 2 May 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து சென்று விட்டார்.

தேனி:
பெரியகுளத்தை சேர்ந்த அன்பழகன் மகள் பிருந்தா (வயது 20). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு, போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்காக இவர் தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
அவர் இன்று மாலை 5 மணியளவில் பயிற்சி மையத்துக்கு செல்வதற்காக பெரியகுளத்தில் இருந்து தேனி கர்னல் ஜான்பென்னிகுயிக் பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்தார். அங்கிருந்து கே.ஆர்.ஆர். நகருக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர், திடீரென பிருந்தா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் அவர் அங்குள்ள வால்கரடு வனப்பகுதிக்குள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். நகையை பறித்த போது பிருந்தாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், மாயாராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மர்ம நபர் தப்பி ஓடிய வால்கரடு வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அந்த மர்ம நபர் எங்கோ தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி வழியாக தினமும் ஏராளமான பெண்கள் பணி முடிந்தும், ஏராளமான மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றும் தங்கள் வீட்டுக்கு நடந்து செல்வார்கள். இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story