பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதி; பசவராஜ் பொம்மை தகவல்


பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதி; பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 2 May 2022 9:16 PM IST (Updated: 2 May 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

மாற்றத்திற்கான காலம்

  கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில் கல்யாண மித்ரா (நலத்திட்ட நண்பர்) உதவி மையம் மற்றும் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு தொடக்க விழா பெங்களூருவில்  நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த உதவி மையம் மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது-

  மாற்றத்திற்கான காலம் தொடங்கியுள்ளது. காரணங்களை கூறும் காலம் முடிந்துவிட்டது. கல்வி, வருவாய் அதிகரிப்பு, சுயமரியாதை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. சமூக நலத்துறை பாதரசத்தை போல் பணியாற்ற வேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்த பயனும் இல்லை. திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அடிமட்ட தொழிலாளர்கள்

  பொருளாதாரம் என்றால் உழைப்பு. உழைப்பு எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு பொருளாதாரம் அதிகரிக்கும். அடிமட்ட தொழிலாளர்கள் நாட்டின் முன்னேற்றத்தை உயர்த்துகிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கிறார்கள். தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக எங்கள் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

  100 விடுதிகள் அமைக்கப்படுகின்றன. தலித் மற்றும் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக 5 ஆண்டுகள் திட்டத்தை வகுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மக்களின் முன்னேத்திற்காக பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளுக்கு 75 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

தகுதியான மக்கள்

  வீடுகள் கட்டிக்கொள்ள ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடைய அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். பயனாளிகளுக்கு அரசின் திட்ட பயன்கள் போய் சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Next Story