வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வளர்ந்துள்ள வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வளர்ந்துள்ள வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ெமய்யநாதன் கூறினார்.
அமைச்சர் பேட்டி
கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சீனா போன்ற நாடுகளில் ‘கிரீன் ஹைட்ரஜன்’ என்ற எரிபொருள் பயன்பாடு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கூட மத்திய மந்திரி, கிரீன் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் காரில் நாடாளுமன்றம் சென்றார். தமிழகத்தில் கிரீன் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான ஆய்வு மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகள், அரசு தரிசு நிலங்கள், தனியார் பட்டா நிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் 1,000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மரங்கள்
தேனி மாவட்டத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் நியூட்ரினோ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அழிப்பதற்கு நவீன எந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 170 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தான் மஞ்சள் பை திட்டம் கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு எந்திரங்கள் தற்காலிகமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story