லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்தோம் கைதான 2 பேர் வாக்குமூலம்
குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் லாரி டிரைவரை அடித்துக்கொலை செய்தோம் என்று கைதான 2 வாலிபர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வேலூர்
குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் லாரி டிரைவரை அடித்துக்கொலை செய்தோம் என்று கைதான 2 வாலிபர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
லாரி டிரைவர் கொலை
ஒடுகத்தூர் அருகே உள்ள குருராஜபாளையத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 40), லாரி டிரைவர். இவர் கடந்த 6 மாதங்களாக வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள முட்புதரில் பூபாலன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்தார்.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் பூபாலனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அரிகிருஷ்ணமூர்த்தி (29), ரேடியாலஜி மாணவர் பரத் (21) ஆகியோர் இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிகிருஷ்ணமூர்த்தி, பரத் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் என்று போலீசார் கூறியதாவது:-
தகாத வார்த்தைகளால்...
கொலை செய்யப்பட்ட பூபாலன் மீது மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக வேப்பங்குப்பம் போலீசில் 5 வழக்குகள் உள்ளன. தொடர் திருட்டு காரணமாக பூபாலனை அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
அதன்காரணமாகவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் அப்துல்லாபுரத்துக்கு வந்தார். அங்கு வைத்து அரிகிருஷ்ணமூர்த்தி, பரத் உள்ளிட்ட பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூபாலன், அரிகிருஷ்ணமூர்த்தி, பரத் ஆகியோர் அடிக்கடி ஒன்றாக மதுஅருந்தி உள்ளனர்.
கடந்த மாதம் 15-ந்தேதி அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது பூபாலனின் செல்போன் மற்றும் ரூ.4 ஆயிரம், டிரைவிங் லைசென்ஸ், ஏ.டி.எம். கார்டு அடங்கிய பர்சை அவருடைய நண்பர்கள் எடுத்துள்ளனர். செல்போன், லைசென்சை மட்டும் தந்து விடும்படி பூபாலன், நண்பர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதை கொடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதுதொடர்பாக பூபாலனுக்கும், பரத், அரிகிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பரத், அரிகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒன்றாக மதுஅருந்தி உள்ளனர். அப்போது பரத் செல்போனில் பூபாலனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூபாலன் வீட்டில் கிடந்த இரும்பு ராடை மறைத்து எடுத்து அவர்கள் மதுஅருந்திய இடத்துக்கு சென்று திடீரென பரத்தின் தலையில் ஓங்கி அடித்தார்.
அதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து பூபாலன் வைத்திருந்த இரும்பு ராடை பிடுங்கி, சரமாரியாக அவரின் தலையில் அடித்துள்ளனர்.
பின்னர் பூபாலனை இழுத்து சென்று அங்குள்ள முட்புதரில் வீசி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த பூபாலன் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
அதையடுத்து அரிகிருஷ்ணமூர்த்தி, பரத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாராயம் கடத்தியதாக அரிகிருஷ்ணமூர்த்தி மீதும், செயின் பறித்ததாக பரத் மீதும் வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.
---
Related Tags :
Next Story