மராட்டியத்தில் நாளை முதல் நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை- ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றவில்லை என்றால் நாளை முதல் நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவுரங்காபாத்,
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றவில்லை என்றால் நாளை முதல் நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிலடி கொடுப்போம்
மராட்டியத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை 3-ந் தேதிக்குள் (இன்று) அரசு அகற்ற வேண்டும் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கெடு விதித்துள்ளார். இதற்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் அவுரங்காபாத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ராஜ் தாக்கரே பேசியதாவது:-
ஒலி பெருக்கிகள் ஒரு சமூக பிரச்சினை, ஆனால் அதை மத பிரச்சினையாக்கினால் நாங்கள் அதே முறையில் பதிலடி கொடுப்போம்.
ரம்ஜான் பண்டிகை 3-ந் தேதி கொண்டாடப்படட்டும். நாங்கள் அந்த சூழலை கெடுக்க விரும்பவில்லை. ஆனால் 4-ந் தேதி (நாளை) முதல் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்காவிட்டால், அனைத்து இந்துக்களும் அந்த மசூதிகளுக்கு முன்னால் அனுமன் பாடல்களை இரட்டிப்பு சத்தத்துடன் ஒலிபரப்ப வேண்டும்.
ஏன் முடியாது?
ஒலிபெருக்கிகளுக்கு மதத்தில் இடமில்லை, எனவே அவை அகற்றப்பட வேண்டும். இது குறித்து போலீசார் ஆய்வு செய்து அவற்றை அகற்ற பார்க்க வேண்டும். அவர்கள் (முஸ்லிம்கள்) சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் மராட்டியத்தின் சக்தியை காட்டுவோம். மசூதிகளுக்கு மேல் உள்ள அனைத்து ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது. இவ்வளவு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அங்கு கச்சேரியா நடக்கிறது?
எங்களை தீவிரமான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ள வேண்டாம். உத்தரப்பிரதேசத்தில் ஒலிபெருக்கி அகற்றப்படும் என்றால் மராட்டியத்தில் ஏன் முடியாது?
கோவில்களில் உள்ள ஒலிபெருக்கிகளும் நீக்கப்படும். ஆனால் அவை மசூதிகளுக்கு பிறகு தான். ஒலிபெருக்கிகள் சட்டவிரோதமானவை. அவற்றை வைக்க அனுமதி கிடையாது. ஒலிபெருக்கிகளால் நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்?
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கியை நீக்காவிட்டால் அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சரத்பவாரின் ஒவ்வாமை
மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தாக்கி பேசிய ராஜ் தாக்கரே, “தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இந்து என்ற வார்த்தையில் ஒவ்வாமை உள்ளது. அவர் நாத்திகர் என்று நான் கூறிய பிறகு தற்போது சரத்பவார் கடவுளுக்கு முன்பாக பிரார்த்தனை செய்யும் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவர் நாத்திகர் என்று அவரது மகள் சுப்ரியா சுலே மக்களவையில் தெரிவித்திருந்தார்.
சாதிவெறி இன்று இங்குள்ள பள்ளிகளில் கூட ஊடுருவி உள்ளது. எழுத்தாளரின் சாதியை பார்த்து புத்தகங்கள் படிக்கப்படுகின்றன. எனது தாத்தா பிரபோத்ங்கர் தாக்கரே எழுதிய புத்தகங்களை சரத்பவார் படிக்க கூறுகிறார். எனது தாத்தா ஒருபோதும் சாதிவெறி நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை” என்றார்.
Related Tags :
Next Story