தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை


தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை
x
தினத்தந்தி 3 May 2022 12:15 AM IST (Updated: 2 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பட்டின பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை பட்டின பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

பட்டின பிரவேசம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம். இந்த நிலையில் மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 
இந்த ஆண்டு இந்த மாதம் (மே) 22-ந் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து உதவி கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள 2022-ம் ஆண்டுக்கான பட்டின பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல். இதனால் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியினை தடைசெய்திடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தடை விதிப்பு

இந்த அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் அடிப்படையிலும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இந்த ஆண்டு நடைபெறும் பட்டின பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடைவிதித்து ஆணையிடப்படுகிறது. 
இதன் அடிப்படையில் சட்டம் மற்றும் ஒழுங்கினை போலீசார் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story