வருவாய்த்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி செய்ய வேண்டும்
வருவாய்த்துறையினர் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை
வருவாய்த்துறையினர் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கான வருவாய்த் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளின் மீது விரைவாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் மற்றும் அனைத்து விதமான சான்றிதழ்கள் வழங்கும் பணிகளில் தாமதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவாக ஆய்வு செய்து முடிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், தலைமை செயலாளர் பிரிவு மனுக்கள், திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்வு நாள் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குறைதீர்வு நாள் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்தால், பொது மக்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும், தலைமை செயலாளர் பிரிவுக்கும் செல்லமாட்டார்கள். ஆகவே இதன் மீது தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.
அதேபோன்று நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை உடனுக்குடன் அனுப்பிட வேண்டும். நீதிமன்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி முடிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் நாள் தோறும் வரும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்வு கண்டால் மக்கள் அடுத்தகட்ட நிலைக்கு புகார் தெரிவிக்க மாட்டார்கள்.
அர்ப்பணிப்புடன்
கிராமத்தில் நீங்கள் முறையாக மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் அந்த கிராமத்திற்கு நீங்கள்தான் ஆட்சியர் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். ஏழை, எளியவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story