திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கண்டக்டரின் டிக்கெட் பை திருட்டு


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கண்டக்டரின் டிக்கெட் பை திருட்டு
x
தினத்தந்தி 2 May 2022 10:13 PM IST (Updated: 2 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பணப்பை என நினைத்து கண்டக்டரின் டிக்கெட் பையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து கோவைக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவராக சவுந்தரராஜன், கண்டக்டராக செந்தில்முருகன் ஆகியோர் இருந்தனர். திண்டுக்கல் பஸ்நிலையத்துக்கு காலை 7.45 மணிக்கு அந்த பஸ் வந்தது.
இதையடுத்து பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கீழே இறங்கினர். அப்போது கண்டக்டர் செந்தில்முருகன் டிக்கெட்டுகள் அடங்கிய பையை பஸ்சில் வைத்து விட்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து அவர் மீண்டும் வந்து பார்த்த போது டிக்கெட்டுகள் இருந்த பையை காணவில்லை. அதில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பஸ் டிக்கெட்டுகள், கண்டக்டரின் ஏ.டி.எம்.கார்டு, அடையாள அட்டை ஆகியவையும் இருந்தன. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில் டிக்கெட் இருந்த பையை பணப்பை என நினைத்து மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்தில் டிக்கெட் பையை வீசி இருக்கலாம் என பஸ் நிலையம் முழுவதும் தேடினர். ஆனால் டிக்கெட் பை கிடைக்கவில்லை. எனவே பஸ்நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story