மின்கம்பத்தில் கார் மோதி தீப்பிடித்தது; நிதிநிறுவன உரிமையாளர் உடல் கருகி பலி


மின்கம்பத்தில் கார் மோதி தீப்பிடித்தது; நிதிநிறுவன உரிமையாளர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 2 May 2022 10:21 PM IST (Updated: 2 May 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே மின்கம்பத்தில் கார் மோதி தீப்பிடித்ததில், நிதிநிறுவன உரிமையாளர் உடல் கருகி பலியானார்.

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே மின்கம்பத்தில் கார் மோதி தீப்பிடித்ததில், நிதிநிறுவன உரிமையாளர் உடல் கருகி பலியானார். 
மின்கம்பத்தில் மோதிய கார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரையை அடுத்த பாலப்பம்பட்டி புதூரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 45). இவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று மாலை இவர், பழனியில் இருந்து பாலப்பம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார். 
அந்த கார், வாகரை பகுதியில் மரிச்சிலம்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் கார் மோதியது. 
இதில் மின்கம்பம் கார் மீது விழுந்தது. அந்த பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. 
உடல் கருகி பலி
இதனையடுத்து, கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் காருக்குள் இருந்த சுரேஷ்பாபுவை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்குள் காரில் பற்றிய தீ மளமளவென பரவியது. கரும்புகையுடன் கார் கொழுந்து விட்டு எரிந்தது. 
இது குறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கும், கள்ளிமந்தையம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 
அப்போது காரின் டிரைவர் இருக்கையில் தீயில் உடல் கருகிய நிலையில் சுரேஷ்பாபு பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் அவருடைய உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பத்தில் கார் மோதி தீப்பிடித்ததில், நிதி நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story