பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி ராதா (வயது 37). இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ராதா கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராதா நேற்று காலை 10 மணி அளவில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலத்தில் நடந்து சென்றார். பின்னர் அவர் திடீரென பாலத்தின் நடுபகுதியில் உள்ள சுவரில் ஏறி ஆற்றில் குதித்தார். இதை பார்த்த பாலம் வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆற்றில் குதித்த ராதா கை, கால்களை அசைத்தவாறு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் ஆற்று பகுதியில் பரிசலுடன் நின்ற தாஜ் நகரை சேர்ந்த ராஜ்குமார் (27) என்பவரை மீட்பு பணிக்கு அழைத்தனர். இதையடுத்து ராஜ்குமார் பரிசலில் ராதா தத்தளித்து கொண்டிருந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் தனி மனிதரால் தத்தளித்து கொண்டிருந்த ராதாவை மீட்டு பரிசலில் ஏற்ற முடியவில்லை. அந்த நேரம் பாலத்தில் நின்ற வாலிபர் ஒருவர் பரிசல் ஓட்டி தடுமாறுவதை பார்த்து நடுஆற்றில் குதித்து நீந்தி சென்று பரிசலில் ஏறி பெண்ணை ஆளுக்கொரு ஒரு கையில் பிடித்து மீட்டு பரிசலில் ஏற்றினர். பின்னர் கரைக்கு வந்ததும் ராதாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணை மீட்க உதவிய பரிசல் ஓட்டியை போலீசார் பாராட்டினர். காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story