விழுப்புரம் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்


விழுப்புரம் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
x
தினத்தந்தி 2 May 2022 11:02 PM IST (Updated: 2 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்


விழுப்புரம்

விளையாட்டு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்த போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிட பள்ளி, சிறப்பு பள்ளிகள் என 9 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் கை, கால் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், மனநலம் குன்றியோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தடகளத்தில் 50 மீ, 100 மீ, 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளில் கபடி, இறகுப்பந்து, கைப்பந்து, எறிபந்து ஆகிய போட்டிகளும் நடந்தன.

பரிசு

இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்கள் உடலில் உள்ள ஊனத்தை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் கலந்துகொண்டு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கி தங்கள் திறமைகளை நிரூபித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கும் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், சுவாமி பரமசுகானந்தராஜி மகராஜ் ஆகியோர்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும் இப்போட்டிகளில் முதலிடத்தை பிடித்த மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்றனர்.


Next Story