வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும்


வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 May 2022 11:29 PM IST (Updated: 2 May 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர்
வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று  திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்பேத்கர் சிலை
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். 
இதில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் அளித்த மனுவில், ‘கோவில்வழி பஸ் நிலையம் நிரந்தர பஸ் நிலையமாக மாற்றப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்தது போல் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலையும், பஸ் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரையும் சூட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த மனுவில், ‘கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்.நகர், பெட்ரோல் நிலையம் முதல் ராதாநகர், நல்லாத்துப்பாளையம், கிழக்கு பகுதி, கூலிபாளையம் வரை சாலை பயன்படுத்த முடியாத வகையில் மேடுபள்ளமாக  உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும். சொர்ணபுரி ஐலண்ட் 7-வது வீதியில் குடிநீர் குழாய் வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
அவினாசி குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘பழங்கரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகளை கேட்டால் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார்கள். கூட்டத்தில் பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்கவில்லை. எனவே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்து, மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
வாகன பழுதுபார்ப்போர் நகர்
திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலசங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், ‘நாங்கள் ஆட்டோ, கார், வேன், பஸ், லாரி போன்ற மோட்டார் வாகனங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறோம். மெக்கானிக், எலக்ட்ரீசியன், டிங்கர், பெயிண்டர், லேத், பஞ்சர் ஒட்டுதல் போன்ற பிரிவுகளில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். 
திருப்பூர் மாநகரில், வாகன பழுதுபார்ப்போர் நகர் என தனி இடம் எங்களுக்கு அமைத்துக்கொடுத்து தொழில் செய்ய வழிவகை  செய்ய வேண்டும். வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் எங்களுக்கு அமைக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தொழில்களை செய்ய சிறு, குறு கடன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story