புதுக்கோட்டையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் இயற்கை மரணமடைந்த 20 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்திற்கான காசோலையினையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் 3 சக்கர வண்டி, ஊன்று கோலும், 10 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 790 மதிப்பீட்டில் விலையில்லா மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரமும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 790 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி வழங்கினார்.
கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனுக்கள் எழுத வசதி
கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் இருபுறமும் வருவாய்த்துறை ஊழியர்கள் அமர்ந்து மனுக்கள் எழுதி கொடுத்தனர். இதற்கிடையில் கலெக்டர் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் பொதுமக்களிடம் மனு எழுதி கொடுக்க அதிக கட்டணம் வசூலித்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
பா.ஜ.க.வினர் மனு
புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், தெம்மாவூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், தான் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் இணைப்பு வேண்டி கோரிக்கை வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், அவரது மகனும் சேர்ந்து தாக்கியதாகவும், அதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை வசதி செய்து தரக்கோரிய விஸ்வநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்யுமாறு கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story