புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவரங்குளம்:
கிராம சபை கூட்டம்
திருவரங்குளம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது திருவரங்குளம் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
100 நாள் வேலை திட்டம்
மேலும் அரசு கட்டிடங்கள், சாலைகள் தரமற்றதாக இருப்பதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து வருங்காலங்களில் சாலை பணிகள், கட்டிடங்கள் தரமானதாக அமைந்திட அதிகாரிகள் கொண்ட குழு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி ஒன்றிய சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
100 நாள் வேலை திட்ட பெண்கள் கோரிக்கையை ஏற்று காலை 7 மணிக்கு வர வேண்டும் என்ற நிலையை மாற்றி 8.30 மணிக்கு வரலாம் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் துறை சம்பந்தமான திட்டங்களை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே குப்பக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். இதனையடுத்து அமைச்சர் உடனடியாக தீர்க்கப்படும் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நிறைவேற்றினார். கூட்டத்தில் நெகிழி இல்லா ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.குளவாய்ப்பட்டி
ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் நளினி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வீரம்மாள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான டெண்டரை ரத்து செய்து அந்தந்த ஊராட்சியில் தலைவர் முன்னிலையில் டெண்டர் விட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரிமளம்
அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ராயவரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி மீனா தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் கருப்பசாமி, ஒன்றிய குழுத்தலைவர் மேகலாமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கடியாபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story