கிருங்காகோட்டை பாலாற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை; அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா
சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அடிக்கல் நாட்டு விழா
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருங்காக்கோட்டை ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் அம்பல முத்து, அவைத் தலைவர் சிவக்குமார், கிருங்காக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு தடுப்பணை கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் சீரமைக்கப்பட்டு வருவதுடன் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கிருங்காகோட்டை ஊராட்சியில் உள்ள பாலாற்றின் குறுக்கே 4.98 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. தடுப்பணை 38 மீட்டர் நீளமும், 154 மீட்டர் உயரமும் கொண்டது. தடுப்பணை கட்டுவதன் வாயிலாக இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தடுப்பணை மூலம் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து கிருங்காக்கோட்டையின் மையப்பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கிருங்காக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசியப்பன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஆண்டவர், தி.மு.க. தொழில் நுட்ப அணி சையது, பிரதாப், கிருங்காக்கோட்டை ஊராட்சி செயலர் மகேஷ் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எரிவாயு உற்பத்தி கூடம்
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.78.50 லட்சம் மதிப்பீட்டில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றின் கழிவு பொருட்களை கொண்டு மின்சாரம், உரம் மற்றும் எரிவாயு உற்பத்தி கூடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் உற்பத்தி கூடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது, நவீனமயத்துடன் புதிதாக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடங்கப்பட்டு வருகிறது. காரைக்குடி என்பது அனைத்திலும் வளர்ச்சி பெற்ற நகரமாக உள்ளது. இங்கு பல்வேறு கட்டமைப்பு, சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்துப்பட்டு வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதலாக பல்வேறு நவீன உத்திகளை கையாள வேண்டிய நிலை தற்போது உள்ளது.. அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் தினந்தோறும் உற்பத்தியாகும் திடக்கழிவுகளான காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவகங்களில் வீணாகும் உணவு பொருட்கள், மீன் கழிவுகள் அவற்றில் இருந்து மீத்தேன் வாயு உற்பத்தி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story