கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு


கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு
x

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.

நெல்லிக்குப்பம்

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.  துணை தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுடர்வேல் வரவேற்றார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு- 

குமரகுரு (தி.மு.க.) :-கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பல ஊராட்சிகளில் முறைகேடாக பயனாளிகள் புதியதாக இணைத்து வருவதாக தகவல் வந்துள்ளது‌. மேலும் ஒன்றிய கவுன்சிலரான எங்களிடம் எதுவும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக ஊராட்சி ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.):- அம்மாபேட்டை பகுதியில்அங்கன்வாடி மையம் தரமற்ற முறையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

 அருள் செல்வம் (வி.சி.க‌.):- அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒன்றிய கவுன்சிலர்கள் அடிப்படை பணிகள் செய்வதற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றார். கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசியின் கணவர் கோவிந்தராஜ் என்பவர் திடீரென்று கூட்டரங்கில் உள்ளே நுழைந்து எய்தனூர் எம்.ஜி.ஆர். நகரில் சாலை அமைப்பதற்கு டெபாசிட் தொகை கட்டவேண்டும் என அறிவுறுத்தியதின்படி ரூ. 25 ஆயிரம் டெபாசிட் கட்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் கூறுகையில், நீங்கள் எந்த அடிப்படையில் கூட்ட அரங்கில் வந்து இது போன்ற கேள்விகள் கேட்க முடியும். இது தவறான செயலாகும். எந்த கோரிக்கையாக  இருந்தாலும் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறி அவரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தினர்.

Next Story