நோயாளியை ஸ்ரெட்ச்சரில் அழைத்து வந்த உறவினர்கள்


நோயாளியை ஸ்ரெட்ச்சரில் அழைத்து வந்த உறவினர்கள்
x
தினத்தந்தி 3 May 2022 1:32 AM IST (Updated: 3 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்காக நோயாளியை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் ஸ்ரெட்ச்சரில் உறவினர்கள் அழைத்து வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் பேபி, தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர், தனது வீட்டில் கால் தவறி கீழே விழுந்தார். இதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதில் வலியால் அலறி துடித்தார். 

இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற்று வரும்படி கூறியதாக தெரிகிறது.

மருத்துவ காப்பீடு

இதையடுத்து அவரது உறவினர்கள் பேபியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு நேற்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஸ்ரெட்ச்சரில் ஏற்றிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து பேபிக்கு உடனடியாக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் ஆம்புலன்சில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து பேபியின் உறவினர்கள் கூறுகையில், ஆதரவின்றி தனியாக வசித்து வரும் பேபிக்கு எந்தவொரு அடையாள அட்டையும் இல்லை. இதனால் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகத்திற்கு வந்து விசாரித்த போது, அடையாள அட்டை இல்லாதவர்கள் நேரில் வரவேண்டும் என கூறினர். அதனால் தான் அழைத்து வந்தோம் என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவ காப்பீட்டு அட்டை தேவையில்லை. இருப்பினும் ஆதரவில்லாத நோயாளிகளுக்கு தேவை ஏற்பட்டால், அதுகுறித்து டாக்டர்கள் முறையாக தகவல் தெரிவித்தால், உடனடியாக அவர்களுக்கு காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை வழங்கப்படும். 

ஆனால் பேபிக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை தேவை என முன்கூட்டியே யாரும் தெரிவிக்கவில்லை.அவர்கள் தகவல் தெரிவிக்காமலேயே ஆம்புலன்சில் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு தெரிவித்திருந்தால், நேரில் சென்று வழங்க நடவடிக்கை எடுத்திருப்போம். மேலும் இதுவரை காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story