மந்திரி அஸ்வத் நாராயண் ராஜினாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்


மந்திரி அஸ்வத் நாராயண் ராஜினாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2022 1:58 AM IST (Updated: 3 May 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக மந்திரி அஸ்வத் நாராயண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக மந்திரி அஸ்வத் நாராயண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் துணைத்தலைவர் வி.எஸ்.உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழலுக்கு ஊக்கம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., கர்நாடக அரசு பணியாளா் தேர்வாணையத்தால் நியமிக்கப்பட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ளார். 40 சதவீத கமிஷன் புகார் குறித்து பிரதமருக்கு காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கடிதம் எழுதினார்.

கமிஷன் விவகாரத்தால் காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். பிரதமர் மோடி அலுவலகத்தின் மூலம் ஊழலுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக ரூ.10 கோடி வரை வழங்க வேண்டும் என்று பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியுள்ளார். அவர் போலீசில் ஏன் புகார் செய்யவில்லை?.

சி.ஐ.டி. விசாரணை

இதுகுறித்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். பசனகவுடா பட்டீல் யத்னாலிடமும் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுக்கு ஊக்கம் அளித்தவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை. நியமன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஒருவரிடம் இருந்து ரூ.80 லட்சம் லஞ்சமாக மந்திரி ஒருவரின் சகோதரர் பெற்றுள்ளார். அந்த மந்திரி விசாரணை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி தனக்கு வேண்டியவரை காப்பாற்றியுள்ளார். ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியான உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் மவுனமாக உள்ளார். உதவி பேராசிரியர் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளது. அந்த விஷயத்திலும் அவர் மவுனமாக இருக்கிறார். இதனால் இந்த முறைகேடுகளில் அவருக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜினாமா செய்ய வேண்டும்

மாகடி தாலுகாவில் 3 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வாகியுள்ளனர். இதில் அஸ்வத் நாராயண் சகோதரருக்கு தொடர்பு உள்ளது. அஸ்வத் நாராயண் அடிக்கடி ஆண்மகன் குறித்து பேசுகிறார். உண்மையிலேயே அவர் ஒரு ஆண்மகனாக இருந்தால் ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மந்திரி அஸ்வத் நாராயண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.
இவ்வாறு உக்ரப்பா கூறினார்.

Next Story