நடராஜரை சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை
சிதம்பரம் நடராஜரை சமூக வலை தளத்தில் தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
சிதம்பரம் நடராஜரை சமூக வலை தளத்தில் தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து மனு கொடுத்தனர். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் கோட்ட செயலாளர் மிசாசோமன், மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன், பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் கங்காதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், வினில்குமார், ஜான்கென்னடி மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் நேற்று கலெக்டர் மூலமாக முதல்-அமைச்சருக்கு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அரசுராஜா கூறியிருப்பதாவது:-
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் சிலர் சிதம்பரம் நடராஜரை மிகவும் தவறான வகையில் விமர்சித்து பதிவிட்டுள்ளனர். இது இந்துக்களின் மத்தியில் பெரும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தாங்கள் இந்து தெய்வங்களை தவறாக வெளியிட்ட சமூக வலைதளத்தை முடக்குவதோடு, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீது நடவடிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி செயலாளர் மேசியா தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்். அதில், ‘குமரி மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்து போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் மாணவர் சேர்க்கையில் பள்ளி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்து வருகிறது. சில தனியார் பள்ளிகளிடம் கேட்ட போது எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்றும், சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய கட்டணத்தை அரசு வழங்கவில்லை என்றும் கூறி இந்த ஆண்டுக்குரிய (2022- 2023) 25 சதவீத மாணவர்களை சேர்ப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரார்த்தனை கூடம்
பொழிக்கரை அருகில் உள்ள புதூர் ஸ்ரீபுதுமால் சாமி கோவில் தலைவர் சிவக்குமார் தலைமையில் பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமத்துக்கும், பொழிக்கரை ஊருக்கும் இடையே சிலர் பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
அழகன்பாறை அருகில் உள்ள காட்டுவிளையைச் சேர்ந்த சேகர் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘நான் 28-11-2021 அன்று எனது இரு கைகளையும் தரையில் ஊன்றியபடி தலைகீழாக நடந்து 64 மீட்டர் (210 அடிகள்) தூரத்தை ஒரு நிமிடம் 27 நொடிகளில் கடந்து சோழன் புக் ஆப் வேர்ல்டு புதிய உலக சாதனை படைத்துள்ளேன். பள்ளி- கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளேன். அதற்காக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து ஆசி பெற ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனக்கூறி உள்ளார்.
Related Tags :
Next Story