பண்ணை குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
கவுரிபித்தனூர் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள். குளிக்க சென்றபோது இந்த பரிதாபம் நடந்துள்ளது.
சிக்பள்ளாப்பூர்: கவுரிபித்தனூர் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள். குளிக்க சென்றபோது இந்த பரிதாபம் நடந்துள்ளது.
குளிக்க சென்றனர்
பெங்களூருவை சேர்ந்த சிறுவன் மனோஜ் (வயது 15). கோடை விடுமுறை என்பதால் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா ஹம்பசந்திரா கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மனோஜ் வந்தான்.
நேற்று மனோஜ், அதேகிராமத்தை சேர்ந்த தனது நண்பர்கள் லிகித் (வயது 16), ராஜேஷ் (16) உள்பட 6 பேருடன் சேர்ந்து கிராமத்தை ஒட்டி உள்ள பண்ணை குட்டையில் குளிக்க சென்றான். இதில் மனோஜ், லிகித், ராஜேஷ் ஆகிய 3 பேரும் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது.
3 சிறுவர்கள் பலி
இதனால் நிலைதடுமாறிய 3 பேரும் குட்டையில் மூழ்கி தத்தளித்தனர். அவர்கள் 3 பேரையும், சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கவுரிபிதனூர் போலீசார்,
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கவுரிபித்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கவுரிபித்தனூர் எம்.எல்.ஏ. சிவசங்கர் ரெட்டி வந்து உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்கினார்.
Related Tags :
Next Story