கூட்டு குடிநீர் திட்டம் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


கூட்டு குடிநீர் திட்டம் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 3 May 2022 2:26 AM IST (Updated: 3 May 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே நல்லூரில் சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு வழங்கினர்.

தென்காசி:
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு வழங்கினர். ஆலங்குளம் தாலுகா நல்லூர் கிராம மக்கள் வழங்கிய மனுவில், ‘‘எங்களது கிராமத்துக்கு சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மூலம் 147 கிராமங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நீர் சுவையில்லாமல் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ஆகையால் ஏற்கனவே கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கியதுபோல் மீண்டும் வழங்க கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் வழங்கிய மனுவில், ‘‘நாங்கள் 2020-ம் ஆண்டு முதல் முழு நேர தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் இதர படிகள் வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்து முன்னணியினர் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர். அதில், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு யூ-டியூப் சேனல் ஒன்றில் சிதம்பரம் நடராஜர் பெருமானை தவறான வகையில் விமர்சித்து காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story