பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை


பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 3 May 2022 2:27 AM IST (Updated: 3 May 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் பரிதவித்தனர்.

பெங்களூரு: பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் பரிதவித்தனர்.

தூங்காமல் பரிதவித்த மக்கள்

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் வீடுகளில் முடங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரு நகரில் திடீரென கனமழை பெய்தது. மெஜஸ்டிக், ராஜாஜிநகர், மல்லேசுவரம், யஷ்வந்தபுரம், கப்பன் பார்க், விதான சவுதா, சிக்பேட்டை, ஹெப்பால், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

இதுபோல உத்தரஹள்ளியில் பெய்த கனமழைக்கு அப்பகுதியில் உள்ள கவுடனபாளையாகெரே ஏரி உடைந்து அருகே இருந்த ராஜகால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாயையொட்டி உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. மேலும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள், கடைகளில் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றினர். இரவு முழுவதும் வீடுகளில் புகுந்த தண்ணீரை மக்கள் வெளியேற்றியதால் அவர்கள் தூக்கம் தொலைந்து போனது.

மின்கம்பங்கள் சேதம்

இதுதவிர மழைக்கு கே.ஜி.ரோடு, பிரசாந்த்நகர், ஸ்ரீராமபுரம், மல்லேசுவரம், சுப்பிரமணியநகர், பி.டி.எம். லே-அவுட் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. எலகங்காவில் உள்ள கேந்திரிய விகார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தென்னை மரம் மீது மின்னல் தாக்கியது. இதில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது.

இதுதவிர பி.வி.கே. ஐயங்கார் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தால் அங்கு கடை வைத்திருப்பவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு பெங்களூரு, கனகபுரா, மாகடி, சந்தாப்புரா, ராமநகர், கோலார் மண்டலத்தில் உள்ள 238 மின்கம்பங்கள் மீது மரம் விழுந்து சேதம் அடைந்தது. அவற்றை சரிசெய்யும் பணிகளில் 627 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக பெஸ்காம் கூறியுள்ளது.

Next Story