விபத்தில் பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது


விபத்தில் பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 3 May 2022 2:34 AM IST (Updated: 3 May 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

முப்பந்தல் அருகே நள்ளிரவில் ஆம்னி பஸ்-டெம்போ மோதிக்கொண்ட விபத்தில் பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது.

ஆரல்வாய்மொழி:
முப்பந்தல் அருகே நள்ளிரவில் ஆம்னி பஸ்-டெம்போ மோதிக்கொண்ட விபத்தில் பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது.
நள்ளிரவில் விபத்து
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆரல்வாய்மொழி நோக்கி வந்தது. அதில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.
முப்பந்தல் அருகே வந்த போது எதிரே வந்த ஆம்னி பஸ்சும், டெம்போம் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் டெம்போவில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் ஒருவரும் பலியானார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான 2 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவரும் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் இறந்தவர்கள் பற்றிய விவரம் முதலில் தெரியாமல் இருந்தது.
அடையாளம் தெரிந்தது
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் யாரென்ற தகவலும், அவர்கள் பற்றிய உருக்கமான தகவலும் தெரியவந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:- 
மார்த்தாண்டம் அருகே காஞ்சாபுரம் கலிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). ராணுவ வீரரான இவர் டெல்லியில் பணிபுரிந்தார். இந்தநிலையில் கோவில் திருவிழாவுக்காக 10 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கோவில் திருவிழாவில் அன்னதானம் தயார் செய்து கொடுப்பதற்காக காய்கறிகள் வாங்க காவல் கிணறு நோக்கி டெம்போவில் சுரேஷ், அதே பகுதியை சேர்ந்த முருகன் (40), விஸ்வம்பரம் (60) ஆகியோர் புறப்பட்டனர்.
பயணிகள் உயிர் தப்பினர்
அங்கு காய்கறி வாங்கி விட்டு நள்ளிரவில் திரும்பிய போது ஆம்னி பஸ்சும், டெம்போவும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டெம்போவை ஓட்டி வந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் முருகன் இறந்தார். நித்திரவிளையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்த அவருக்கு மனைவி உமா மகேஸ்வரியும், 1 மகள், 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகே பெரிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. டெம்போ மீது மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் டிரான்ஸ்பார்மரை உரசியது போல் சென்று அப்படியே நின்றது. இந்த அதிர்வில் அருகில் உள்ள மின்கம்பம் சற்று சாய்ந்தது.
டிரான்ஸ்பார்மர் மீது பஸ் வேகமாக மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
பஸ் டிரைவர் மீது வழக்கு
மேலும் இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவரான  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அன்னை நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (54) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story