ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு கோரிய வழக்கு தள்ளுபடி


ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 3 May 2022 2:45 AM IST (Updated: 3 May 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டில் முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நான் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியில் உள்ளேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற எனக்கு தகுதி உள்ளது. இந்த பதவி உயர்வை பரிசீலிப்பதற்கான மத்திய அரசின் குழு கூடி உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய தனி மற்றும் பொது குறைதீர்க்கும் துறை செயலாளருக்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலித்து முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பதவி உயர்வு சம்பந்தமான நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட முடியாது. பதவி உயர்வுக்கான தகுதி இருந்தபோதும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று எந்த ஒரு ஊழியரும் உரிமையாக கோர முடியாது.
பதவி உயர்வு சம்பந்தமான நடவடிக்கையானது, உரிய நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். 
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் முத்துராமலிங்கம், மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் உத்தரவிட்டனர்.


Next Story