அந்தியூர் அருகே கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்- ரேஷன்-ஆதார் கார்டை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு


அந்தியூர் அருகே கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்- ரேஷன்-ஆதார் கார்டை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2022 3:09 AM IST (Updated: 3 May 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் திரண்டு வந்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
அந்தியூர் அருகே கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் திரண்டு வந்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்குவாரி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறிது நேரம் கலந்து கொண்ட கலெக்டர் பின்னர் வேலை விஷயமாக வெளியே செல்வதற்காக தனது வாகனம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தியூர் அருகே உள்ள கொமாராயனூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புரட்சி பாரத கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் ஆ.சீரங்கன் தலைமையில், தாங்கள் கொண்டு வந்த வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுவை கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கொமராயனூர் கிராமத்தில் கூப்புகாடு என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியால் பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கல்குவாரியை தடை செய்யக்கோரி 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உரிமம் ரத்து
இந்த கல்குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தி வெடிக்க செய்வதால் கற்கள் சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய பூமிகள் மற்றும் வீடுகளில் விழுகிறது. மேலும் அதிர்வால் ஆழ்துளை கிணறுகளும் இடிந்து விழுகிறது. அரசு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை சுட்டிக் காட்டினால் அந்த நிறுவனத்தினர் விவசாயிகளை மிரட்டுகின்றனர். எனவே கல் விழுந்து உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story