பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை
தஞ்சை களிமேட்டில் தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தே.மு.தி.க., சார்பில் நிவாரண தொகையை பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
வல்லம்
தஞ்சை களிமேட்டில் தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தே.மு.தி.க. சார்பில் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
திசை திருப்புகிறார்கள்
கடந்த 94 ஆண்டுகளாக களிமேடு கிராமத்தில் தேர் திருவிழா நடந்து வருகிறது. சாலை உயர்த்தப்பட்டதாலும், உயரழுத்த மின்கம்பி இருந்ததாலும்தான் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்த விழாவுக்கு எங்களிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தை மக்கள் மீது திசை திரும்புகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. விடிய, விடிய ஒரு திருவிழா நடக்கிறது. இது எப்படி போலீசாருக்கு தெரியாமல் போகும்.
கண்துடைப்பு
இது என்ன முதல் ஆண்டாக நடக்கும் திருவிழாவா?. பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை. மந்திரி, முதல்வர் வந்தால் ரோட்டில் பல மணி நேரமாக போலீசார் நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள். எனவே அஜாக்கிரதையாக நடந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்துவது எல்லாம் கண்துடைப்பு.
என்ன செய்தாலும் இழந்த 11 உயிர்களை திரும்பப் பெற முடியாது. இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தேர் விபத்தில் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story