பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
கும்பகோணத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்பகோணம்
அரியலூா் மாவட்டம் தேவமங்கலங்கத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சதீஷ்குமார்(வயது 20). இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து தேவமங்கலத்துக்கு அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
அப்போது அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பஸ்சை சரவணன்(43) ஓட்டினார். கண்டக்டராக தமிழ்வாணன்(42) பணியில் இருந்தார்.
தவறி விழுந்து பலி
கும்பகோணம் 60 அடி சாலை திருப்பத்தில் பஸ் சென்றபோது, படியில் பணம் செய்த சதீஷ்குமாரின் தோளில் அணிந்து இருந்த பை சாலையின் ஓரத்தில் இருந்த கம்பியில் சிக்கியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் சதீஷ்குமார் உடலை கல்லூரி சாலை அருகே கொண்டுவந்து நடுரோட்டில் வைத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், அன்பழகன் எம்.எல்.ஏ., மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம், மாணவர்கள் முறையிட்டனர்.
டிரைவர்-கண்டக்டர் கைது
இந்த விபத்து தொடர்பாக டிரைவர், கண்டக்டர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்ததன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து சதீஷ்குமாரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பஸ்சில் பயணம் செய்த மாணவர் விபத்தில் இறந்த சம்பவம் கும்பகோணத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story