இருசக்கர வாகனங்கள் வாங்க 5 உலமாக்களுக்கு மானியம்-கலெக்டர் வழங்கினார்
சேலத்தில் 5 உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரம் மானியத்தொகையை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்:
சேலத்தில் 5 உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரம் மானியத்தொகையை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 389 மனுக்கள் வரப்பெற்றன.
அந்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் கார்மேகம், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலியை வழங்கினார்.
உலமாக்களுக்கு மானிய தொகை
இதைத்தொடர்ந்து வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் 5 உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1¼ லட்சம் மானியத்தொகையை காசோலையாக கலெக்டர் வழங்கினார். மேலும், தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறளோவியம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் தனலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சத்யபாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story