தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு:சேலம் கோர்ட்டில் 2 பேர் ஆஜர்
தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் சேலம் கோர்ட்டில் 2 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (வயது 55). சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள இவரது வீட்டில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அதிகாலை நெடுஞ்சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தி வீடு புகுந்து மூர்க்கத்தனமான முறையில் தாக்கி கொள்ளையடிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த "பவாரியா" என்ற கும்பலால் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் கார்த்தி நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தீரன்- அதிகாரம் ஒன்று என்ற படம் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சேலம் 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் தலைமறைவாக உள்ளதால் அவர்கள் மீதான வழக்கை பிரித்து விட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களான சென்னை புழல் சிறையில் இருக்கும் அசோக், ஜெகதீஷ் ஆகிய 2 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story