‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரசு கட்டிடங்கள் பராமரிக்கப்படுமா?
தர்மபுரி தாலுகா அலுவலகம் அருகே பழைய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள சில கட்டிடங்கள் உரிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இந்த கட்டிடங்களை சுற்றியுள்ள பகுதி புதர் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியின் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு உள்ள கட்டிடங்களை முறையாகப் பராமரிக்கவும், புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, தர்மபுரி.
===
பராமரிப்பில்லாத கை கழுவும் தொட்டிகள்
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கூடுதல் கட்டிடம் அருகில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கை கழுவுவதற்காக தொட்டி அமைத்துள்ளனர். இந்த தொட்டி பகுதியில் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இது அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே அந்த தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, தர்மபுரி.
===
ஆபத்தான பள்ளி கட்டிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை ஒட்டி மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த கட்டிடம் சேதமடைகிறது. இந்த மரங்கள், பள்ளி கட்டிடத்தின் மீது எப்பொது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, வாடமங்கலம், கிருஷ்ணகிரி.
===
தாழ்வாக செல்லும் மின்வயர்கள்
வனவாசி சாரணப்பட்டி ஊராட்சியில் மின்கம்பங்கள் நீண்ட இடைவெளியில் உள்ளதால் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றன. இது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மின்கம்பியை உரசியபடி செல்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஏதேனும் அசம்பாவிதம் சம்பவம் நடக்கும் முன்பு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், சாரணப்பட்டி.
===
இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
நாமக்கல் நகராட்சி 13-வது வார்டு சேந்தமங்கலம் சாலை சாமியப்பா காலனி பகுதியை ஒட்டி ரெயில்வே சந்திப்பு சாலை உள்ளது. இங்குள்ள சாக்கடை நீரில் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.எம்.சேக்நவீத், நாமக்கல்.
===
வேகத்தடையை பராமரிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வேலம்பட்டி சாலை தளி கூட்ரோடு அருகே வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடை போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனஓட்டிகள் வரும்போது வேகத்தடை இருப்பது தெரியாமல் தவறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு விரைவில் தீர்வு காணவேண்டும்.
-ஹரி, தளி, கிருஷ்ணகிரி.
Related Tags :
Next Story