சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில் 40 குடியிருப்புகளுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில் 40 குடியிருப்புகளுக்கு தனிப்பட்டா வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
சேலம்:
சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில் 40 குடியிருப்புகளுக்கு தனிப்பட்டா வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பட்டா கேட்டு மனு
வாழப்பாடி அருகே அயோத்தியாபட்டணம் சின்னகவுண்டாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஊர்பொதுமக்கள் நேற்று ஆதார் அட்டைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடியிருப்புகளுக்கு தனிப்பட்டா வழங்க கோரி கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
வாழப்பாடி அருகே சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். ஆனால் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர், நாங்கள் வசிக்கும் நிலம் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக தெரிவித்து மிரட்டல் விடுக்கிறார். மேலும், வீடுகளின் முன்பு கல், மணல் ஆகியவற்றை கொட்டி இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு அனைத்து குடியிருப்புகளுக்கும் தனிப்பட்டா வழங்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலை வசதி
இதேபோல், காடையாம்பட்டி அருகே கூகுட்டப்பட்டி கிராமம் காஞ்சேரி காட்டுவளவு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்களது குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல வசதியாக சாலை அமைத்து தரக்கோரி குழந்தைகளுடன் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, பள்ளி மாணவ, மாணவிகளின் நலன்கருதி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
சேலம் அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கோவிலுக்கு செல்லும் வழித்தட பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். இடங்கணசாலை காந்திநகர் ரேஷன் கடையில் மண்எண்ணெய், அரிசி, பருப்பு உள்பட பொருட்கள் சரியாக வழங்குவது இல்லை என்று கூறியும், ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் மனு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story