குட்டையில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம்: உறவினர்கள்-பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில், அரசு பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலியான மாணவனின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் எழிலரசன்(வயது 10). இவன், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த 28-ந்தேதி எழிலரசன், தனது நண்பர்களுடன் மாதவரம் அருகே பாலசுப்பிரமணிய நகரில் உள்ள குட்டையில் குளித்தபோது, சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பலியானான். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பலியான மாணவன் எழிலரசனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள், மாணவனின் சாவுக்கு அரசு பள்ளி நிர்வாகம்தான் காரணம் எனக்கூறி நேற்று மாத்தூர்-மணலி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், “மாணவன் உயிரிழந்த அன்று பள்ளிக்கு திடீரென விடுமுறை விட்டது ஏன்?. அன்று பள்ளிக்கு விடுமுறை விட்டதால்தான் மாணவர்கள் அனைவரும் குட்டையில் குளிக்கச் சென்றனர். இதனால்தான் மாணவன் எழிலரசன் பலியாகி உள்ளான். எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுபற்றி கல்வி அதிகாரிகளிடம் பேசி, அரசு பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story