செல்போனில் வேறு சில ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்: கட்டையால் அடித்து மனைவி படுகொலை


செல்போனில் வேறு சில ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்: கட்டையால் அடித்து மனைவி படுகொலை
x
தினத்தந்தி 3 May 2022 1:17 PM IST (Updated: 3 May 2022 1:17 PM IST)
t-max-icont-min-icon

செல்போனில் வேறு சில ஆண்களுடன் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு, கட்டிலில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர், நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (வயது 26). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவருக்கும், பீகாரை சேர்ந்த ரஷியா கத்துனா (22) என்ற பெண்ணுக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் ஆனது.

கணவன்-மனைவி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து மேற்கண்ட முகவரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். ஹரிஷ் பிரம்மா, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 29-ந்் தேதி இரவு ரஷியா, கட்டிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு விட்டதாக கூறி அவரை ரத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரிஷ் பிரம்மா கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரஷியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அம்பத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, ரஷியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ரஷியா, கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார், ஹரிஷ் பிரம்மாவை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் ஹரிஷ் பிரம்மா அளித்துள்ள வாக்குமூலத்தில், “கடந்த 3 மாதங்களாக எனது மனைவி ரஷியா, வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசி வந்தாள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சம்பவத்தன்று அவளை கட்டையால் தாக்கிவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ரஷியா சுயநினைவின்றி கிடந்தாள். பின்னர் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். ஆஸ்பத்திரியில் எனது மனைவி கட்டிலில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்ததாக நாடகமாடினேன். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கிக்கொண்டேன்” என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், மனைவியை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு கட்டிலில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story