ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை


ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 3 May 2022 6:44 PM IST (Updated: 3 May 2022 6:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. 

ரமலான் பண்டிகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக இந்த பண்டிகையை முன்னிட்டு அவர்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். நோன்பு நாட்கள் முடிந்த நிலையில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர். முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ரமலான் பண்டிகை வீடுகளிலேயே கொண்டாடப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும், அவலூர் பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வாழ்த்துக்கள்

 இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஒன்றாக இணைந்து தொழுகை செய்தனர். அப்போது ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 
சிறுவர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு அசைவ உணவு வழங்கினர்.

மேலும் மணலூர்பேட்டை சாலை ஈக்தா மைதானத்திற்கு தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தொழிலதிபர் ஜமாலுதீன் உள்ளிட்டோர் தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களுக்கு  ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வந்தவாசி

வந்தவாசியில் இஸ்லாமியர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து வந்தவாசி பஜார் சாலை, பழைய பஸ் நிலையம் ஆரணி சாலை வழியாக ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
உலக அமைதி வேண்டியும், குடிநீர் பஞ்சம் தீர மழை பெய்ய வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் வந்தவாசி சுற்றியுள்ள பிருதூர், இந்திரா நகர், அம்மையப்பட்டு, மாலையிட்டான் குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

ஆரணி

ஆரணி டவுன் சூரியகுளம் பென்ஷன் லைன் மசூதி, ஆரணிப்பாளையம் பகுதி உள்ள பெரிய மற்றும் சின்ன மசூதி, காஜிவாடை பகுதியில் உள்ள பெரிய மசூதி உள்ளிட்ட மசூதிகளிலும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு தொழுகை நடத்தினர். ஏராளமான இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினருடன் தொழுகையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர், 

கலசபாக்கம்
கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம், காந்தபாளையம், வீரளூர், காஞ்சி, காரப்பட்டு, மோட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் முக்கிய மைதானங்களில் போலீசார் பாதுகாப்பு பணியிலும்,  ரோந்து பணியிலிலும் ஈடுபட்டிருந்தனர்.

Next Story