தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி, தாய் பலி
தூத்துக்குடியில் நேற்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணியும், அவருடைய தாயும் பலியானார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணியும், அவருடைய தாயும் பலியானார்கள்.
தொழிலாளி
தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமன் என்ற முத்தையா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார வளாகத்தில் டோக்கன் கொடுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 45). இவர்களது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா (21).
இவருக்கும், விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகா கர்ப்பமானார். 8 மாதம் நிறைவடைந்த நிலையில் கார்த்திகாவுக்கு கடந்த 29-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.
படுத்து உறங்கினர்
இவர்கள் வீட்டின் மேற்கூரையானது, பனங்கட்டை கொண்டு மேல் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்பகுதியில் பிளைவுட் கொண்டு மேற்பகுதி மூடப்பட்டு இருந்தது. இதனால் மேற்கூரை சேதம் அடைந்து அவ்வப்போது லேசாக உடைந்து விழுந்தபோதும், அதனை கவனிக்காமல் எலி ஓடுவதாகவே நினைத்து உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த அறையில் முத்துராமன், அவரது மனைவி காளியம்மாள், மகள் கார்த்திகா ஆகிய 3 பேரும் படுத்து உறங்கி உள்ளனர். அந்த அறையின் வெளிப்பகுதியில் உள்ள ஒரு அறையில் முத்துராமனின் தாய் காத்தம்மாள் படுத்திருந்தார்.
பேசிக்கொண்டிருந்தனர்
நேற்று அதிகாலையில் முத்துராமன் வேலைக்கு செல்வதற்காக எழுந்து உள்ளார். அவர் சிறிது நேரம் வீட்டில் பீரோ அருகே சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தார். அப்போது காளியம்மாள், கார்த்திகா ஆகியோரும் கண் விழித்து உள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது மேற்கூரையில் மணல் விழுவது போன்ற சத்தம் கேட்டு உள்ளது. இதனால் வழக்கம்போல் எலி ஓடுவதாக நினைத்துக்கொண்டனர்.
மேற்கூரை இடிந்தது
ஆனால், சிறிது நேரத்தில் வீட்டின் மேற்கூரை மொத்தமாக இடிந்து வீட்டின் உள்பகுதியில் விழுந்தது. இதனால் முத்துராமன், காளியம்மாள், கார்த்திகா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த முத்துராமனின் தாய் அதிர்ச்சி அடைந்து, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
உடனே, போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன் அங்கிருந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தினர்.
கர்ப்பிணி-தாய் சாவு
அப்போது இடிபாடுகளில் சிக்கிய காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
பீரோவின் அருகில் இருந்த முத்துராமன் மீது அதிக அளவில் கற்கள் விழாமல் பீரோ தடுத்ததால், பலத்த காயத்துடன் அவர் உயிர் தப்பினார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆறுதல்
இந்த துயர சம்பவம் பற்றி கேள்விபட்டதும் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முத்துராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரிடம் தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த 4-வது நாளில் கர்ப்பிணியும், அவருடைய தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story