ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கூடலூர்
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பண்டிகை
கடவுள் ஒருவரே, நோன்பு இருத்தல், 5 வேளை தொழுதல், தானம் வழங்குதல், மெக்கா புனித பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய கடமைகளை இஸ்லாமிய மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதில் ரமலான் நோன்பு ஆண்டுதோறும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த மாதம் முஸ்லிம் மக்கள் நோன்பு காலத்தை தொடங்கினர். தொடர்ந்து நேற்று முன்தினம் பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து நோன்பு காலத்தை நிறைவு செய்யும் வகையில் புனித ரமலான் பண்டிகையை நேற்று கொண்டாடினர். வழக்கமாக கேரளாவில் ஒரு நாள் முன்கூட்டியே ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். ஆனால் நடப்பாண்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு தொழுகை
பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியுடன் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதன்படி ஊட்டி பெரிய பள்ளிவாசலில் இமாம் சுல்தான் ஆலம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் பெடரேஷன் பள்ளிவாசல், பிங்கர் போஸ்டு பள்ளிவாசல்களில் தொழுகை நடந்தது. மார்க்கெட் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஊட்டி ஏ.எம்.சி.ஏ. அரங்கில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் குன்னூர் பாத்திமா பள்ளி வாசலின் இமாம் முஜிபுர் ரகுமான் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொழுகை முடிந்து வந்த பின்னர் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் சமூக வலைதளம் மூலம் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதேபோல் கூடலூர் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ஜமால் மவுலவி தலைமையிலும், சின்ன பள்ளிவாசலில் அப்துல் ஜபார் மவுலவி தலைமையிலும், மேல் கூடலூர் ஜும்மா மசூதியில் கமருதீன் பார்கவி தலைமையிலும், கூடலூர் சுங்கம் பள்ளிவாசலில் பைசல் மவுலவி தலைமையிலும் காலை 8 மணிக்கு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
கூடலூர்
கூடலூர் முஸ்லிம் அனாதை இல்ல பள்ளிவாசலில் முகமது அலி பார்கவி தலைமையிலும், நடுவட்டம் பள்ளிவாசலில் அபிபுல்லா தலைமையிலும், தேவர்சோலை ஷெரிப் தலைமையிலும், நெலாக்கோட்டையில் அபூபக்கர் பார்கவி தலைமையிலும், மச்சிக்கொல்லி மட்டம் பள்ளிவாசலில் அப்துல் ரகுமான் பார்கவி தலைமையிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு தானம் வழங்கினர். பின்னர் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று தங்களது மூதாதையரின் நினைவு இடங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் மவுலவி சதாம் உசேன் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதைப்போல ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள நூர் உல் மதரஸா பள்ளிவாசலில் தலைமை இமாம் மவுலவி சிகாபுதீன் தலைமையில் காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது தொழுகைக்குப் பிறகு இஸ்லாம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி, தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதேபோல அரவேனு, கட்டப்பெட்டு, எஸ்.கைகாட்டி, கூக்கல் தொரை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. மேலும் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாம் மக்கள் அண்டை வீட்டார் மற்றும் தங்களது நண்பர்களுக்கு பிரியாணி, இனிப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story