கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிதரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிதரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 May 2022 7:58 PM IST (Updated: 3 May 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

கோ.ஆதனூர் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிதரக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம், 

விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதிய அளவுக்கு வகுப்பறை கட்டிட வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் அங்குள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக்கோரி பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்தும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் நேற்று பள்ளி சீருடையில் அங்குள்ள விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் செயின், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாமியானா பந்தல்

அப்போது பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை விரைந்து கட்டிதரவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இருப்பினும் மாணவர்களின் பெற்றோர், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக தாசில்தார், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால்தான் போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்தனர். 
இந்த நிலையில் கடும் வெயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு சாமியானா பந்தல் அமைக்க பெற்றோர்கள் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டனர். 
அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

போக்குவரத்து பாதிப்பு

இதனால் பெற்றோர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக்கோரி பள்ளி விடுமுறை நாளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story