மெக்கானிக் வீட்டில் ரூ.12 லட்சம் நகைகள் கொள்ளை
பண்ருட்டி அருகே மெக்கானிக் வீட்டில் ரூ.12 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ்(வயது 42). இவரது மனைவி வசந்தி(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ், சிங்கப்பூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொந்த ஊரான பூங்குணம் கிராமத்திற்கு அவர் வந்திருந்தார். புதிய வீடு கட்டுவதற்காக வங்கி லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து விற்க சுரேஷ் முடிவு செய்தார். இதற்காக வங்கி லாக்கரில் இருந்த நகைகளை வீட்டுக்கு எடுத்து வந்து பீரோவில் வைத்திருந்தார்.
30 பவுன் நகை கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவில் வீட்டிற்குள் வெப்பமாக இருந்தது. எனவே இரவு சாப்பிட்டுவிட்டு, சுரேஷ் குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூங்கினர்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் சுரேஷ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவை மர்மநபர்கள் உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
கதவு உடைப்பு
இதற்கிடையே சுரேஷ் குடும்பத்தினர் நேற்று காலையில் எழுந்து வீட்டுக்குள் வந்து பார்த்தனர். அங்கு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததையும், பீரோவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும் நேரில் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகை மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் மோப்பமிட்ட அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story