அட்சய திருதியை தினத்தில் நகை வாங்க குவிந்த பெண்கள்


அட்சய திருதியை தினத்தில் நகை வாங்க குவிந்த பெண்கள்
x
தினத்தந்தி 3 May 2022 9:11 PM IST (Updated: 3 May 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியையொட்டி திண்டுக்கல்லில் நகை வாங்க கடைகளில் பெண்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்:
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் திருதியை அட்சய திருதியை திருநாளாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்சுமிதேவி வாசம் செய்யும் பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றை வாங்குவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தில் தங்க நகை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அட்சய திருதியை தினமாகும். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் விதவிதமான மாடல்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே திண்டுக்கல்லில் நேற்று காலை 6 மணிக்கே ஒருசில நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அட்சய திருதியை தினத்தில் முதல் பொருளாக தங்கம் வாங்குவதற்கு மக்கள் நகைக்கடைக்கு சென்றனர். மேலும் காலை 10 மணிக்கெல்லாம் பெரும்பாலான நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. புதிய மாடல் நகைகளை பெண்கள் அணிந்து அழகு பார்த்து பின்னர் வாங்கினர்.
இதில் வசதி படைத்தவர்கள் பவுன் கணக்கில் நகைகளை வாங்கினர். அதேபோல் நடுத்தர குடும்பத்தினர் எப்படியாவது தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் குறைந்தபட்சம் மோதிரம், கம்மல் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு நகைக்கடைகளில் வாங்கும் நகைக்கு ஏற்ப செய்கூலி, சேதாரம் தள்ளுபடி, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் பெரும்பாலான நகைக்கடைகளில் இரவு வரை பெண்களின் கூட்டத்தை பார்க்க முடிந்தது.

Next Story