செங்கல்சூளை இடித்து அகற்றம்
செங்கல்சூளை இடித்து அகற்றம்
தளி:-
உடுமலையை அடுத்த அமராவதி அருகே பூமிதான வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட செங்கல் சூளை வருவாய்த்துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.
பூமிதான இயக்கம்
நிலமற்ற ஏழைகள், கூலித் தொழிலாளர்களுக்கு நிலம் அளிக்கும் வகையில் பூமிதான இயக்கம் தொடங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நிலமுள்ள பண்ணையாளர்கள், ஜமீன்கள், நிலக்கிழார்களிடம் இயக்கத்தின் சார்பில் நிலம் பெறப்பட்டது. அப்படி பெறப்பட்ட நிலங்கள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அந்த நிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்காக பூமிதான வாரியமும் தொடங்கப்பட்டது.
அந்த வகையில் உடுமலையை அடுத்த அமராவதி அருகே ஆண்டிகவுண்டனூர் 2 கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் பூமிதான வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 13.99 ஏக்கர் நிலம் உள்ளது.
அந்த நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து செங்கல்சூளை அமைத்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதிகாரிகள் ஆய்வின் போது இந்த ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவீடு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட செங்கல்சூளையை அகற்றிக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை அகற்றுவதற்கு முன்வரவில்லை.
செங்கல்சூளை அகற்றம்
அதைத்தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.கீதா தலைமையில் தாசில்தார் கணேசன், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பூமிதான வாரிய நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றினார்கள். அதைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் தரப்பில் அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பூமிதான வாரியத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் சம்பந்தப்பட்ட பயனாளிகள் விவசாயம் சார்ந்த பணிகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் அதை பயன்படுத்த முடியாது. மேலும் இந்த நிலத்தில் யாரேனும் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story