இறைவனின் சமையலறை உணவு கூடத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ‘இறைவனின் சமையலறை’ உணவு கூடத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ‘இறைவனின் சமையலறை’ உணவு கூடத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுக்களை அளிக்க வருகின்றனர். இவ்வாறு செல்வோர் மதியத்திற்கு மேல் தான் அவர்களது வீட்டிற்கு செல்கின்றனர்.
இதில் கையில் பணம் வைத்து உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கடையில் ஏதாவது வாங்கி சாப்பிடுகின்றனர். பணம் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தான் சாப்பிடும் நிலை உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டராக இருந்த கந்தசாமி குறைத்தீர்வு கூட்டத்திற்கு வரும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்ற நோக்கில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அருகில் உணவு கூடம் ஒன்றை ஏற்படுத்தினார்.
‘இறைவனின் சமையலறை’
இதற்கு ‘இறைவனின் சமையலறை’ என்று பெயர் சூட்டினார். இந்த கட்டிடம் அப்போது சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு குறைத்தீர்வு நாளன்று கோரிக்கை மனு அளிக்க வரும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் என பலர் பயன் அடைந்தனர்.
இந்த திட்டம் சில மாதங்களே செயல்பட்டது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் அனைத்து கூட்டங்களும், அனைத்து விழாக்களும் நடைபெற்று வருகின்றது.
மேலும் முன்பை போல் தற்போதும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்கு சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வருகை தருகின்றனர்.
ஆனால் அந்த உணவு கூடம் காட்சி பொருளாகவே உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே மக்களிடம் வரவேற்பு பெற்ற ‘இறைவனின் சமையலறை’ என்ற உணவு கூடத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இலவச உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story