பஞ்சு பதுக்கலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


பஞ்சு பதுக்கலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 May 2022 9:28 PM IST (Updated: 3 May 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சு பதுக்கலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர், 
நூல் விலை உயர்வால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சு பதுக்கலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நூல் விலை உயர்வு
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூல் விலை ஏற்றத்தால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தித்துறை மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சு இறக்குமதி வரியை நீக்கினால், நூல் விலை ஓரளவுக்காவது குறையும் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் அதற்கு மாறாக நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. எனவே பஞ்சு விலை உயர்வுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான நூல் விலை உயர்வு ஒட்டுமொத்த ஜவுளித்துறையையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் இந்த துறை சார்ந்த அனைத்து ஜாப்ஒர்க் நிறுவனங்களும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. பெரும்பாலான ஜாப்ஒர்க் நிறுவனங்கள், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களாகும். அவற்றுக்கு தேவையான அளவு ஜாப்ஒர்க் ஆர்டர் கிடைக்காதபட்சத்தில் தொழிலை தொடர்ந்து நடத்துவது கேள்விக்குறியாகி இருக்கிறது.
பஞ்சு பதுக்கல்
சாய ஆலைகள் பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலையும் 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் சாயமிடுவதற்கு ஏற்றுமதியாளர்களும், பின்னலாடை உற்பத்தியாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே உள்நாட்டு தேவைக்கான பஞ்சு போக மீதம் உள்ள பஞ்சை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான நல்ல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் மென்மேலும் வளரும்பட்சத்தில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அன்னிய செலாவணி ஈட்டுவதும் அதிகரித்து இந்திய பொருளாதாரத்துக்கு உதவியாக அமையும். பின்னலாடை வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story