தகட்டூர் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி உபகரணங்கள்
வாய்மேடு அருகே தகட்டூர் அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக வழங்கினர். இந்த பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே தகட்டூர் அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக வழங்கினர். இந்த பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
கல்வி உபகரணங்கள்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் மலையன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசளிக்கும் விழா, பள்ளியின் சாலைக்கு இடமளித்தவர்களுக்கு பாராட்டு விழா, பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் சீர்வரிசையாக கொடுக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் கோவிந்தசாமி வரவேற்றார். கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லமுத்து எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், வளர்ச்சி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீர்வரிசையாக வழங்கினர்
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள், பள்ளிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக அளித்தனர்.
முன்னதாக கிராம மக்கள் ஒன்றிணைந்து ‘நம் பள்ளி நமது பெருமை’ என்ற முழக்கத்துடன் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான எல்.இ.டி. டி.வி., தண்ணீர் சுத்திகரிப்பான், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், எழுது பொருட்கள், நாற்காலி மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.
இந்த விழாவை தொடர்ந்து அரசு பள்ளியில் புதிதாக 6 மாணவர்கள் சேர்ந்தனர். இந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
----
Related Tags :
Next Story